×

பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 3வது பதக்கம் வென்றார் தேவேந்திரா: சுந்தர் சிங்குக்கு வெண்கலம்

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர் தேவேந்திரா (ஈட்டி எறிதல்) 3வது முறையாக பதக்கம் வென்று அசத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும்  பாரா ஒலிம்பிக் போட்டியில் நேற்று  ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப் 46) பைனலில் இந்திய வீரர்கள்  தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார், அஜீத்  சிங் ஆகியோர் பங்கேற்றனர். இலங்கை வீரர் தினேஷ் பிரியல் 67.79 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து  புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 2வது இடம் பிடித்த  தேவேந்திரா (64.35 மீ.) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியதுடன், 2016ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட (63.97மீட்டர்) உலக சாதனையை முறியடித்தார். மற்றொரு இந்திய வீரரான  சுந்தர் சிங் 64.01 மீட்டர் எறிந்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை வசப்படுத்தினார். ஒரே போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அஜித் சிங் (56.15 மீ.) 8 வது இடம் பிடித்தார்.ராஜஸ்தானில் உள்ள சுரு மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரா (40 வயது), ஏற்கனவே  2004ல்   ஏதென்சில் நடந்த பாரா ஒலிம்பிக் மற்றும் 2016ல் நடந்த ரியோ  பாரா ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். அவர் நேற்று வென்ற வெள்ளி, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வெல்லும் 3வது பதக்கமாகும். மும்முறை தாண்டுதல் போட்டியிலும்  தேவேந்திரா  பங்கேற்றுள்ளார்.  ஏதென்ஸ் டிரிபிள் ஜம்ப்பில் களமிறங்கிய அவர் பதக்கம் வெல்லவில்லை. அதே சமயம், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கம் வென்ற, அதிக பதக்கங்கள் வென்ற ஒரே இந்திய வீரர் தேவேந்திரா மட்டுமே. மின்சாரம் தாக்கியதால்… தேவேந்திரா 8 வயது சிறுவனாக இருந்தபோது ஒரு மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அருகில் இருந்த மின் கம்பி  உரசியதால் இடது கை  கருகியது. அதனால் அவரது இடது கையில் பாதியை டாக்டர்கள் அகற்றினர். ஆனாலும்,  பள்ளியில் படிக்கும்போதே  எல்லோருக்குமான  ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று வெற்றிகளை குவித்தார். தன்னம்பிக்கையை கைவிடாத தேவேந்திரா தொடர்ந்து சாதித்து வருகிறார்….

The post பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 3வது பதக்கம் வென்றார் தேவேந்திரா: சுந்தர் சிங்குக்கு வெண்கலம் appeared first on Dinakaran.

Tags : Devendra ,Para Olympic ,Sundar Singh ,Paralympic Games ,Paralympic Javelin ,Dinakaran ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்